தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Friday, January 21, 2011

”இண்டர்லோக்” பாடநூல் சர்ச்சைக்குத் தீர்வாக அமையலாம்

பின் இணைப்புக்  குறிப்புகள், அருஞ்சொல் அகராதி, வழிகாட்டி போதனாமுறைகள்  முதலானவை, ”இண்டர்லோக்” பாடநூல்  சர்ச்சைக்குத்  தீர்வாக அமையலாம் என்று  துணைப் பிரதமரும்  கல்வி அமைச்சருமான முகிதின் யாசின் கூறியுள்ளார். 
ஆயினும், ஐந்தாம் படிவ மலாய் இலக்கியப் பாடத்திட்டத்திலிருந்து அந்த நூலை மீட்டுக் கொள்வது உட்பட இறுதி முடிவு இன்னும் செய்யப்படவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று கல்வி அமைச்சு, மஇகா மற்றும் இதர அமைப்புக்களுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுக்கள், “இண்டர்லோக்” நாவல் இந்திய சமூகத்தை இழிவுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்ற ஒருமித்த இணக்கத்தை கண்டதாக முகிதின் தெரிவித்தார்.
“ஒரே மலேசியா கோட்பாடிற்கேற்ப, இனங்களுக்கிடையிலான தேசிய ஐக்கியம் மற்றும் ஒருங்கிணைப்பு குறித்து அந்த நாவலில் விவாதிக்கப்படுகிறது. அதில் பயன்படுத்தப்பட்ட குறிப்பிட்ட சில சொற்கள் குறித்து மஇகாவும் குறிப்பிட்ட சில இந்திய அமைப்புக்களும் கவலை தெரிவித்துள்ளன.”
“சில யோசனைகளை நாங்கள் (கல்வி அமைச்சு) தெரிவித்துள்ளோம். பின் இணைப்புக் குறிப்புகள், அருஞ்சொல் அகராதி, வழிகாட்டிகள் உட்பட, அந்த விவகாரத்துக்கு ஒரு  திட்டவட்டமான தீர்வைக் காண்பதற்கு மஇகாவுடன் மேலும் பேச்சுக்கள் நடத்தும்படி அமைச்சரவை எங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.”
அந்தச் சர்ச்சைக்கு மனநிறைவளிக்கும் ஒரு தீர்வைக் காண்பதற்கு, சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் மேலும் பேச்சுக்கள் நடத்தப்படும் என்றாரவர். கூடிய விரைவில் ஒரு முடிவு காணப்படும் என இன்று தெனாங்கில் செய்தியாளர்களிடம் துணைப் பிரதமர் கூறினார்.
கடந்த செவ்வாய்க்கிழமையன்று  நடத்தப்பட்ட பேச்சுக்களில், மஇகாவின் ஆறு பிரதிநிதிகள் உட்பட பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த 22 பேராளர்கள் கலந்து கொண்டனர். துணைக் கல்வி அமைச்சர் டாக்டர் முகமட் புவாட் சர்காஷி  அந்த கூட்டத்துக்கு தலைமை வகித்தார்.
அந்த பேச்சுக்களின் முடிவுகள் குறித்து அமைச்சரவையிடம் முகிதின் விளக்கமளித்தார். அது குறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்களுடன் மேலும் பேச்சுக்கள் நடத்தும்படி அமைச்சுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

2 comments:

  1. தேசிய ஆசிரியர் சங்கத் தலைவர் (NUTP) ஹசிம் அட்னான் இண்டர்லோக் நாவல் இந்தியர்களை இழிவுபடுத்துகிறது என்று கூறியுள்ளார். ஜனவரி 18, பெரித்தா ஹரியான் மலாய் நாளிதழின் 4ஆம் பக்கத்தில் இவர் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.


    “இந்த நூல் இந்திய மாணவர்களின் சுயமரியாதையைப் பெரிதும் பாதிப்பதாக உள்ளது. இளம் மாணவப் பருவத்தில் இவர்களின் முன்னோர் வரலாற்றை இழிவுபடுத்துவதன் மூலம் பிற மாணவர்களின் முன் இந்திய மாணவர்களுக்குப் பெருத்த தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளார் நூலாசிரியர். ஒரே மலேசியா கோட்பாட்டைச் செயல்படுத்துவதில் தீவிரமாய் இருக்கும் பிரதமரின் முயற்சிக்கு இந்த நூல் பெரும் தடையை உண்டாக்கும்.


    “இந்த நூலைப் பயிலும் அனைத்து மாணவர்களின் மனத்திலும் மோசமான எதிர்மறைக் கருத்துகள் விதைக்கப்படும் அபாயம் தெளிவாய்த் தெரிகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் மனத்தைப் புண்படுத்தும் சொற்களும் வரலாற்றுக் குறிப்புகளும் நூலில் நிறைய உள்ளன. குறிப்பிட்ட சில சொற்கள் மாணவர்களைக் கேலி செய்யும் நோக்கத்தில் அடிக்கடிப் பயன்படுத்தப்படும் அபாயமும் உள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கிடையிலான சிறு சச்சரவுகளின்போது இந்தச் சொற்கள் பயன்படுத்தப்படுமானால் நிலைமை மோசமாகிவிடக் கூடும். ஆகவே கதைப் போக்கு கெட்டுவிடாமல் இன இழிவு தொடர்பான சொற்களை அகற்றி நூலைச் சீர் செய்ய வேண்டியது அவசியம்”, என்று ஹசிம் அட்னான் கூறியுள்ளார்.

    ReplyDelete
  2. இந்த நாட்டின் வளமைக்கு உரமாகிப் போன தமிழரின் உண்மை வரலாறு மீண்டும் எழுதப்பட வேண்டும்.

    ReplyDelete