தாய் தந்தையர் என்றுமே நமது வாழ்க்கையில் முதன்மை நிலையில் வைத்து போற்றக்கூடியவர்கள் ஆவர். பெற்றோர்களிடமிருந்துதான் அன்பு உருவாக்கப்படுகிறது. எனவே ஒரு மனிதன் வாழ்க்கையில் எந்த நிலைக்குச் சென்றாலும் அவர்களை மறந்துவிடக்கூடாது.

Thursday, January 20, 2011

பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிகளுக்கு காணிக்கை செலுத்த காலையில் இருந்தே பக்தர்கள் படையெடுப்பு தொடங்கி விட்டது


பத்துமலையில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமிகளுக்கு காணிக்கை செலுத்த காலையில் இருந்தே பக்தர்கள் படையெடுப்பு தொடங்கி விட்டது.
இன்று வானமும் முருகப் பெருமானின் வழிபாட்டுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று எண்ணியதோ என்னவோ மழை பெய்வதற்கான அறிகுறியே இல்லாமல் வானம் தெளிவாக இருக்கிறது.
பத்துமலைக் குகைக்கோவிலுக்கு செல்லும் படிக்கட்டுகளில் இடைவெளி இல்லாத அளவுக்கு பக்தர்கள் கூட்டம் மலையேறிக் கொண்டிருக்கிறது.
பால்குடங்கள் தூக்கி வருகின்ற பக்தர்கள் வெய்யிலுக்கு முன்னர் அழகன் முருகனுக்கு அபிஷேகத்தை முடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு மலை ஏறிக் கொண்டிருக்கிறார்கள்.
காவடிகளும் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், அவை  சிங்கார வடிவேலுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் சின்னச் சின்ன காவடிகள்தான்.
காவடி எடுக்க ஆயத்தமாகும் இடமான ஆற்றங்கரையில் காவடிகளை அலங்கரிக்கும் வேலை மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. 
11 மணிக்கு மேல் பிரமாண்டமான காவடிகள் திருமுருகன் சந்நிதியை நோக்கி புறப்பட ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டரசுப்பிரதேசம், சிலாங்கூர் மாநிலங்களுக்கு பொது விடுமுறை என்பதால் கூட்டம் அதிகமாக இருக்கிறது. 
அதே நேரத்தில் தைப்பூசத்துக்கு நேர்த்திக் கடன் செலுத்துகிறேன் என்று உள்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் பல பக்தர்கள் வேண்டிக் கொண்டு... அந்த வேண்டுதலை நிறைவேற்ற பத்துமலைக்கு வந்திருப்பதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதற்கு காரணமாகும்.
பத்துமலைக்கு வருகின்ற பக்தர்களுக்கு சிரமம் ஏற்படக் கூடாது என்பதற்காக தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது.
பாதுகாப்பு ஏற்பாடுகளும் மருத்துவ வசதிகளூம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment